பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்துக் கொள்வார்கள்: மு.க.அழகிரி உறுதி
கருணாநிதி சமாதி நோக்கி நடைபெறும் பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்துக் கொள்வார்கள் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி காலமானார். அதன் பிறகு, திமுகவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது. குறிப்பாக, கருணாநிதியின் மகன்களான மு.க.ஸ்டாலினும், மு.க.அழகிரியும் போட்டிக் களத்தில் உள்ளனர். இதற்கிடையே, கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, மு.க.அழகிரி தீவிர அரசியிலில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளார்.'
இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி சென்னையில் கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று மு.க.அழகிரி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதுகுறித்து இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி கூறுகையில், திமுகவில் என்னை சேர்ப்பதாக தெரியவில்லை. அதற்கான என் ஆதங்கத்தை நேரம் வரும்போது தெரிவிப்பேன்.
வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி கருணாநிதி சமாதியை நோக்கி நடத்தும் பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள். பேரணிக்கு பிறகு எனது முடிவை தெரிவிப்பேன் என்றார்.