ரூ.2,600 கோடி கோரும் கேரள அரசு

வெள்ள சேதங்கள், மறுகட்டமைப்பு உள்ளிட்ட பணிகளுக்காக 2,600 கோடி ரூபாய் வழங்குமாறு மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த 8ஆம் தேதி தொடங்கிய பேய் மழை 11 நாட்களுக்கு மேலாக நீடித்தது. மாநிலத்தின் 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தது. 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் மண் மூடி சேதமானது.

மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டிருப்பதாக முதல்கட்ட கணக்கெடுப்பு கூறுகிறது. கேரளாவின் அண்டை மாநிலங்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், அரசு ஊழியர்கள், தன்னார்வ அமைப்புகள், மகளிர் மற்றும் இளைஞர் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் பல கோடி ரூபாய் நிவாரணநிதியாக வழங்கி வருகின்றன.

இதனிடையே, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில், கேரளாவின் வெள்ளச்சேதங்கள், மறு கட்டமைப்பு, சீரமைப்பு பணிகளுக்கு மத்திய அரசிடம் கூடுதல் நிதி உதவி வழங்க கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, முதல் கட்டமாக கேரளாவிற்கு ரூ.2600 கோடி சிறப்பு நிதி வழங்க கோரிக்கை விடப்பட்டது. இதனை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 30ஆம் தேதி அம்மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. அதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து 700 கோடி நிதி பெற மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் கேரளா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

More News >>