வாஜ்பாய் அஸ்திக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால், கடந்த 16ஆம் தேதி மறைந்தார். அவர் உடல், 17ஆம் தேதி முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அடல் பிஹாரி வாஜ்பாய் அஸ்தியானது நேற்று (ஆக.22 ) சென்னை கொண்டு வரப்பட்டது. தியாகராயநகரிலுள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வாஜ்பாய் அஸ்தி அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. பாஜக தொண்டர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று காலை கமலாலயத்திற்கு வந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினார்.

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட திமுக-பாஜக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

சென்னை கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அஸ்தி 7 தலைவர்கள் தலைமையில், 7 வண்டிகளில் அனைத்து மாவட்டங்களுக்கும் அஸ்தி கொண்டு செல்லப்பட உள்ளது. 26ஆம் தேதி 3 கடல், 4 நதிகளில் அஸ்தியை கலக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை வைகை, ஸ்ரீரங்கம் காவிரி, பவானி, தாமிரபரணி ஆகிய 4 நதிகள். சென்னை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 3 கடல்களில் வாஜ்பாய் அஸ்தி கலக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

More News >>