கைவிட்ட கபடி.. ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற சிறுவன்

18வது ஆசிய விளையாட்டுப் போட்டி, இந்தியாவுக்கு ஏராளமான அதிர்ச்சியையும் எதிர்பாராத ஆனந்தத்தையும் கொடுத்து வருகிறது. ஐந்தாம் நாள் போட்டி முடிவடைந்த நிலையில். இந்திய கபடி அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது.

1990ம் ஆண்டு ஆசிய போட்டிகளில் கபடி அறிமுகமானது முதல் கடந்த போட்டி வரை இந்திய அணியே தங்கப்பதக்கத்தை தட்டி வந்தது.

இந்தியாவின் எதிர்ப்பாரில்லாத கபடி ஏகாதிபத்தியம் இந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. ஆசிய போட்டிகளில் இருமுறை இரண்டாமிடம் பெற்ற ஈரான் அணியிடம் 18 - 27 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி தோல்வியுற்று வெண்கலத்துடன் திருப்தி அடைந்துள்ளது.

அதேவேளையில் டபுள் டிராப் துப்பாக்கிச் சுடும் போட்டியில் பதினைந்து வயது வீரரான ஷர்டுல் விஹான், வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

தங்கம் (வயது 34) - வெள்ளி (வயது 15) -வெண்கலம் (வயது 42) என்ற வரிசையில் மற்ற வெற்றியாளர்கள் அதிக வயது வித்தியாசம் கொண்டவர்களாக இருந்தனர். பெண்கள் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் அங்கிதா ரெய்னா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

ஐந்தாம் நாள் போட்டி முடிவுகள் படி, நான்கு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் பத்து வெண்கலம் ஆக மொத்தம் 18 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் பத்தாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

More News >>