முக்கொம்பு மேலணையில் புதிய அணை... முதலமைச்சர் அறிவிப்பு
முக்கொம்பு மேலணையில் 325 கோடி மதிப்பில் புதிய அணை கட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் உடைந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அந்த பகுதியில் தற்காலிக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் முக்கொம்பு பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
இன்று திருச்சி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மதகு உடைந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தற்காலிக சீரமைப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அமைச்சர்கள் காமராஜ், வெல்லமண்டி நடராஜன், துரைகண்ணு, வளர்மதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பிறகு பேசிய முதலமைச்சர் பழனிசாமி, மேலணையில் 325 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அணையும், 85 கோடி ரூபாய் செலவில் கதவணையும் கட்டப்பட உள்ளதாக அறிவித்தார்.
இது குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், திட்ட அறிக்கை தயாரானதும் கட்டுமான பணிகள் தொடங்கும் எனவும் தெரிவித்தார். தற்போது உள்ள அணையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இந்த புதிய அணை கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"15 மாதங்களுக்குள் புதிய அணை மற்றும் கதவணையை கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் மணல் அள்ளப்படுவதற்கும், மதகுகள் உடைந்ததற்கு எந்த தொடர்புமில்லை" என முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.