கேரள வெள்ளத்திற்கு தமிழகம் காரணமா?

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உரிய நேரத்தில் தமிழகம் தண்ணீர் திறக்காததும் வெள்ள பாதிப்புக்கு காரணம் என உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பதில் மனுத்தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கேரள அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "தமிழக அரசு உரிய முறையில், முன்கூட்டியே கவனமாக தண்ணீர் திறந்திருந்தால் வெள்ளப் பாதிப்பை குறைத்திருக்க முடியும். ஆகஸ்ட் 14 ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வெகுவேகமாக உயர்ந்தது. அப்போது கேரள தலைமை செயலாளர், தமிழக தலைமை செயலாளரை தொடர்பு கொண்டு, உரிய நேரத்தில் படிப்படியாக தண்ணீரை திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்."

"ஆனால், தமிழக அரசு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகஸ்ட் 14 ஆம் தேதி 137 அடியாக இருந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை வேகமாக அதிகரித்த நிலையில், வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது."

"அதே நாள் காலை 8 மணி அளவில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால், இடுக்கி அணையை முழுமையாக திறக்க வேண்டிய நிலை உருவானது."

"தமிழகம் உரிய முறையில் கட்டுப்பாட்டுடன் நீரை திறந்திருந்தால், இடுக்கி அணையில் இருந்து கூடுதலாக நீரை திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது. வெள்ளப் பாதிப்பு இந்தளவு ஏற்பட்டிருக்காது" என கேரள அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "கேரள மாநில வெள்ளத்திற்கு 80 அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீரே காரணம். முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டுவிடாக் கூடாது என்பதற்காக தவறான தகவலை கேரள அரசு பரப்பி வருகிறது" எனக் கூறினார்.

More News >>