வெகு விரைவில் சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கம்

சென்னையில் வெகு விரைவில் மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்குவது தொடர்பாக, மின்சார பேருந்துகளை இயக்கும் இங்கிலாந்து நிறுவனமான சி- 40 நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "சென்னையில் எந்தெந்த வழித்தடங்களில் மின்சார பேருந்துகளை இயக்குவது, அதற்குண்டான உள்கட்டமைப்பு வசதிகளை எவ்வாறு மேற்க்கொள்வது. மின்சார வாரியம் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அளித்த அறிக்கை மீது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது" என்றார்.

"மின்சார பேருந்துகளை இயக்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைவது , பேருந்து சேவையை எளிதாக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது."

"மின்சார பேருந்துகளை இயக்க தேவையான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசிதிகள் குறித்து ஒருமித்த கருத்து எட்டப்பட்டவுடன் வெகுவிரைவில் சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும்" என அமைச்சர் கூறினார்.

"மேலும், தற்போது செயல்பாட்டில் உள்ள நடத்துனர் இல்லா பேருந்து, கழிவறை வசதிக்கொண்ட பேருந்து, படுக்கை வசதிக்கொண்ட பேருந்துகள் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அடுத்தக்கட்டமாக மேலும் 500 பேருந்துகளை அடுத்த மாதம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது" என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

More News >>