இந்தியாவின் கோரிக்கையை புறக்கணித்த வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்பில் உலா வரும் எந்த ஒரு பதிவையும் தொடங்கி வைத்த மூல பயனரை கண்டுபிடிக்க வழி செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை வாட்ஸ் அப் நிராகரித்துள்ளது.

மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை வாட்ஸ் அப் நிறுவன தலைவர் கிறிஸ் டேனியல்ஸ் சந்தித்து பேசினார்.

கூட்டம் முடிந்த பிறகு, வதந்தி உருவாகும் இடத்தை தெரிவிக்கக்கூடிய தொழில்நுட்ப உத்தியை கண்டுபிடிக்க இந்திய அளவில் ஓர் அமைப்பை உருவாக்குமாறும், குறைதீர்ப்புக்கென பிரத்யேக அலுவலரை நியமிக்குமாறும் அரசு, வாட்ஸ் அப் நிறுவனத்தை கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களால் ஆதாரமற்ற வதந்திகள் பரவுகின்றன. உணர்ச்சிகர வாக்குவாதங்கள் நடக்கின்றன. அவை கும்பல் படுகொலை போன்ற சமுதாய விரோத செயல்களை தூண்டுகின்றன. இதுபோன்ற செய்தி பரிமாற்றம் முதலாவது யாரால் தொடங்கி வைக்கப்படுகிறது என்பதை கண்டறிய முடிந்தால், கொடுமையான குற்றங்களை தடுக்கலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், வாட்ஸ் அப் பதிப்பை முதலாவது செய்யும் நபரை கண்டறிவதற்கு தொழில்நுட்ப ரீதியான தீர்வை தரும்படி இந்திய அரசு வாட்ஸ் அப்பை கேட்டுக் கொண்டது.

பதிவுகளின் மூலத்தை அறிவது, தனிநபர் இரகசியம் காக்கும் நிறுவன கொள்கைக்கு எதிரானது என்றும், தகவலை இடைமறித்து யாரும் பார்க்க இயலாத தொழில்நுட்பத்தை நீர்த்துப் போகச் செய்யக்கூடியது (end-to-end encryption) என்றும் தெரிவித்துள்ள வாட்ஸ் அப் நிறுவனம், பொய்யான தகவல்களை இனம் கண்டுகொள்வது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் செய்யப்படும் என்று கூறியுள்ளது.

ஆதாரமற்ற வதந்திகள், பொய்யான தகவல்கள் பரவுவதை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் இருமுறை வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு இருமுறை அறிவிக்கை அனுப்பியுள்ளது.

அதற்கு தாங்கள் இந்திய அளவில் ஒரு குழுவை உருவாக்கி தனியாக தலைவரை நியமிக்க இருப்பதாகவும், பயனர்கள், பெற்று பகிரப்படும் பதிவுகளை (forwarded messages) அடையாளம் காணும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகவும், பெற்று பகிரக்கூடிய பயனர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள 150 கோடி வாட்ஸ் அப் பயனர்களுள் 20 கோடி பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு பொது தேர்தல் நடைபெற இருக்கிற நிலையில், தவறான தகவல்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் செயலை கடுமையாக கையாள இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.

More News >>