குழந்தை கடத்தலை தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? - நீதிமன்றம்
குழந்தை கடத்தலை தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து உள்துறை மற்றும் சமூக நலத்துறை முதன்மை செயலாளர்கள் செப்டம்பர் 24-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை பாரிமுனை பகுதியில் தெருவோரம் தூங்கிய 8 மாத குழந்தை ராகேஷ் மற்றும் வால்டாக்ஸ் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த சரண்யாவும் கடத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, குழந்தைகளை மீட்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல் ஆட்கொனர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குழந்தை கடத்தலை தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தை கடத்தல் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.
அரசு தரப்பின் இந்த கோரிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், குழந்தை கடத்தலை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக வேதனை தெரிவித்தனர். அத்துடன், மற்ற வழக்குகளை போல் அல்லாமல், இந்த வழக்கிற்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
மேலும், தமிழக அரசு இந்த பிரச்னையின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளவில்லை எனவும், நீதிமன்றம் அழுத்தம் கொடுத்துதான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றில்லை. இந்த விவகாரத்தில் அரசே முன்வந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.
அத்துடன், 100-க்கும் மேற்பட்ட தமிழக குழந்தைகள் விமான நிலையம் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கான நோக்கம் தொடர்பாக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்தியாவின் கடைசி குடிமகனின் குழந்தையும் பாதுகாப்பாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், குழந்தை கடத்தல் விவகாரம் குறித்து செப்டம்பர் 24-ஆம் தேதி உள்துறை மற்றும் சமூக நலத்துறை செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.