வீடுகளை சீரமைக்க ரூ.1 லட்சம் வட்டி இல்லா கடன்: பினராயி விஜயன் அறிவிப்பு
மழை வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சீரமைப்பதற்காக ரூ.1 லட்சம் வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் வீடுகள் பலத்த சேதமடைந்தன. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதில் சிக்கி சுமார் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது மழை மெல்ல குறைந்து, கேரள மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மறு சீரமைப்பு பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. ஆனால், வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை நேரில் சென்று சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் பின்னர் கூறியதாவது: மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு மற்றும் துப்புரவு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் மூலம் 60,593 வீடுகள் மற்றும் 37,626 கிணறுகள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 துணைமின் நிலையங்களில் 41 நிலையங்கள் செயல்பட தொடங்கி உள்ளன.
கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி, 2,774 முகாம்களகளில் 10,40,688 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த முகாம்கள் பெரும்பாலும் பள்ளி மற்று கல்லூரிகளிலேயே அமைக்கப்பட்டு உள்ளன. எனவே ஓணம் விடுமுறையை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் வேறு இடத்திற்கு மாற்றும் செய்யப்படுவர்.
இந்த முகாம்களில் தங்கியிருக்கும் அனைவருக்கும் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் கிடைப்பதாக தெரிவித்தனர். மழை வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளின் சீரமைப்பு பணிகளுக்காக, பெண்களை தலைவராக கொண்ட குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
மேலும், முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்புவோருக்கு 5 கிலோ அரிசு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பை வழங்கப்படும்.இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.