பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: டெல்லியில் பரபரப்பு

டெல்லியின் நங்லாய் என்ற பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட கடும் தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் பொருட்கள் நாசமானது.

டெல்லி நங்லாயில் உள்ள நரேஷ் பார்க் பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது. மூன்று தளங்கள் கொண்ட இந்த தொழிற்சாலையில், பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பைகள் பல்வேறு பகுதிகளுக்கும் சப்ளை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பிளாஸ்டிக் என்பதால், மளமளவென பிடித்த தீ தொழிற்சாலை முழுவதும் பரவத் தொடங்கின.

இந்த தீ விபத்தில், பிளாஸ்டிக் பைகள் மற்றும் அது தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. இந்த விபத்தால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.

தீ விபத்து குறித்து, போலீசார் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 25 வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை என்பதால் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றாலும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

டெல்லியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News >>