கேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை: மக்கள் பீதி

கேரளாவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து அம்மாநில மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கேரளாவில் கடந்த இரு வாரங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் பல மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தன. நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு என மக்களை வாட்டி வதைத்துவிட்டது இந்த கனமழை. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதைதவிர, இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த துயரத்தில் இருந்து மீளாத அம்மாநில மக்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்தில் கேரளாவில் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். அதாவது, வரும் 27ம் தேதி கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் 28ம் தேதி மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய வட கேரள பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மழையின் அளவு 7 முதல் 11 செ.மீ இருக்கும் எனவும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் இரவு நேரங்களில் மலைப்பாதையில் பயணிக்க வேண்டும் என்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றும் கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

More News >>