மீண்டும் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு
கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து மீண்டும் திறந்துவிடப்பட்ட தண்ணீரால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கனழை காரணமாக கர்நாடகாவிலுள்ள கபினி, மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சுமார் 2.05 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தமிழகத்தின் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடியதால் கரையோரம் இருந்த கிராமங்கள் வெள்ளத்தில் மிதந்தன.
இந்நிலையில், கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் தற்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணைகளின் பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்து 32 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படவாய்ப்புள்ளது. இதனால் கரையோர மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.