கேரள மழை வெள்ளம் பாதிப்பு: ரூ.7 கோடி வழங்குகிறது ஆப்பிள் நிறுவனம்
கேரளாவில் கனமழையால் சேதமடைந்த பகுதிகளுக்கு ரூ.7 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் வரலாறு காணாத கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. பல்வேறு இடங்களில், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டதால் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர்.
கேரள மாநிலத்திற்கு சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அளவிற்கு கடும் சேதமடைந்துள்ளது. மத்திய அரசு ரூ.600 கோடி நிதி வழங்கிய நிலையில், பிற மாநிலங்களும் கேரள மாநிலத்திற்கு உதவி வருகின்றன.
மழை குறைந்துள்ள நிலையில் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் கேரள மாநிலத்தில் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. இந்நிலையில், கேரளாவுக்கு ரூ.7 கோடி வழங்குவதாக முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக ஆப்பிள் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் மனமடைந்துள்ளோம். ஆப்பிள் சார்பில் கேரள முதல்வர் பொது நிவாரண நிதி கணக்கு மற்றும் மெர்சி கிராப்ஸ் இந்தியா எனும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.7 கோடி வழங்கப்படுகிறது. வீடு இழந்தோர், பள்ளிக் கூடங்களை கட்டவும் இந்த நிதி உதவியாக இருக்கும்.