நல்லாசிரியர் விருது: தமிழகத்தில் இருந்து ஒருவர் மட்டுமே தேர்வு
மத்திய அரசு ஆண்டுதோறும் நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களில் சிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்கும் வகையில் நல் ஆசிரியர் விருதுகளை வழங்கிவருகிறது.
இதற்காக மாநில அரசுகள் தங்களுடைய மாநிலத்தில் சிறந்த ஆசிரியர்களின் பெயர் பட்டியலையும் அவர்களின் சாதனைகளையும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அப்படி பரிந்துரை செய்யப்பட்ட ஆசிரியர்களை நேரில் அழைத்து நேர்காணல் மூலம் சிறந்த ஆசிரியரை தேர்வு செய்து அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கும்.
ஆனால் இந்த ஆண்டு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அதில் மாநில அரசு ஆண்டு தோறும் பரிந்துரைத்து வரும் முறையை மாற்றி அந்த அந்த ஆசிரியரே ஆன்லைன் விண்ணப்பம் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம்.
அப்படி பதிவு செய்த ஆசிரியர்களின் பெயர்களை பரிசீலித்து நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதில் தேர்ச்சி பெரும் ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியருக்கான விருதினை வழங்குகிறது மத்திய அரசு.
அதன்படி தமிழகத்தில் இருந்து சிறந்த ஆசிரியருக்கான விருதுக்கு ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 6 ஆசிரியர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அதிலும் கடைசியாக ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே சிறந்த ஆசிரியருக்கான நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானார்.
அவர் பெயர் ஆர்.சதி, கோவை மாவட்டத்தில் உள்ள மதுக்கரை மலுமிச்சம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
அவர் தனக்கு தேசிய அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருது கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்து, " அரசு பள்ளிக்கு தலைமை ஆசிரியராக நான் வந்தபோது பள்ளியில் 146 மாணவர்கள் மட்டுமே படித்துக்கொண்டு இருந்தனர். தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 270, அதில் மாற்று திறனாளி மாணவர்கள் மட்டும் 28.
கடந்த ஆண்டு முதல் எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கையடக்க கணினி மூலம் பாடம் நடத்தபட்டு வருகிறது. மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்ததற்காகவே எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது என நம்புகிறேன்" என்றார் ஆசிரியர் சதி.