மாலத்தீவின் மீது போர்?... சுப்ரமணியன் சுவாமியின் கருத்துக்கு மத்திய அரசு விளக்கம்
மாலத்தீவு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, அந்நாட்டின் மீது இந்தியா போர் தொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத்தை சுப்பிரமணியன் சுவாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தித்துப் பேசினார்.
அதன் பின்னர், சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில், மாலத்தீவில் நடைபெறவிருக்கும் தேர்தலில் முறைகேடு நடைபெறலாம் என்று நஷீத் அச்சம் தெரிவித்தார்.
அண்டை நாடான மாலத்தீவில் தேர்தல் முறைகேடு நடப்பதை இந்தியா அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு நடைபெற்றால், அந்நாட்டின் மீது இந்தியா போர் தொடுக்க வேண்டும். மாலத்தீவு அதிபர் யாமீன், இந்தியர்களை அவமதிக்கிறார்” எனத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், “சுசுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட கருத்துக்கும், இந்திய அரசுக்கும் தொடர்பில்லை. அது அவரது சொந்த கருத்து” என்றார்.
மாலத்தீவில் நெருக்கடி நிலையை அந்நாட்டு அதிபர் யாமீன் பிரகடனம் செய்தார் என்பதும் பின்னர் அது தளர்த்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.