2ஜி வழக்கின் தீர்ப்பில் சந்தேகமடைந்த திமுக ஆதரவு கட்சி
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பல கேள்விகளை எழுப்புகிறது என திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “2ஜி வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, பதில்களைவிட மேலும் பல கேள்விகளையே எழுப்பியுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடானது ரூ.1.76 லட்சம் கோடி அளவிற்கு ஒரு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது என்று மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியால் மதிப்பீடு செய்யப்பட்டது; அது மிகத்தெளிவாக நிறுவப்பட்ட ஒன்று.
இந்த ஒதுக்கீடுகளை தவறான முறையில் பெற்றதில் ஈடுபட்ட சில தொலைத்தொடர்பு நிறுவனங்களை உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறது; அந்த நிறுவனங்களது உரிமங்களை ரத்து செய்திருக்கிறது.
இந்நிலையில், சிபிஐ நடத்திய வழக்கும், அதன் விசாரணை நடைமுறைகளும் போதுமான அளவு நிரூபிக்கப்படவில்லை; எனவே இதை சட்டப்பூர்வமாக எடுத்துச் சென்றிட தேவையான நடவடிக்கைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும்; அப்போதுதான் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.