டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்...
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்த அனைத்து கட்சிக் கூட்டம் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் தொடங்கியது.
தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள், 51 மாநில கட்சிகளுக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, நாடாளுமன்ற அதிமுக குழு தலைவர் வேணுகோபால், திமுக சார்பில் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது, அரசியல் கட்சி செய்யும் செலவுகள், உரிய நேரத்தில் தேர்தல் செலவு கணக்கு பார்ப்பது, வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சார செலவை குறைத்து உச்சவரம்பு நிர்ணயிப்பது, வாக்காளர் பட்டியலின் வெளிப்படை தன்மை, மின்னணு இயந்திரத்தில் உள்ள நிறைகுறைகள், தேர்தல் ஆணையத்துக்கு கட்சிகளின் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகின்றது.
இந்தக் கூட்டத்தில், தேர்தல் நாளுக்கு, இரு தினங்களுக்கு முன்பு இருந்து, அச்சு ஊடகம் மற்றும் பத்திரிகைகளில் அரசியல் விளம்பரம் செய்ய தடை விதிப்பது குறித்து கருத்து கேட்கப்படவுள்ளது. அத்துடன், 48 மணி நேரத்துக்கு முன்பு, சமூக ஊடகங்கள், வலைதளங்களிலும் வேட்பாளர் குறித்த விளம்பரத்தை தடுக்கவும் பரிசீலிக்கப்படவுள்ளது.
மேலும், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது. இக்கூட்டத்தில், வாக்குப்பதிவு இயந்திர சர்ச்சைகள் குறித்து, எதிக்கட்சிகள் கேள்வி எழுப்பலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.