ரயிலில் மேற்கூரை அறுத்து ரூ.5.78 கோடி கொள்ளை - துப்புக் கொடுத்த நாசா
2016-ஆம் ஆண்டு ரயிலில் 5 புள்ளி 78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அமெரிக்கா நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தமிழக சிபிசிஐடி காவல்துறைக்கு துப்புக் கொடுத்துள்ளது.
சேலத்திலிருந்து சென்னை வந்தடைந்த விரைவு ரயிலில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கி பணம் 5 புள்ளி 78 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவம் நடந்து கிட்டதட்ட இரண்டு வருடம் கடந்து விட்ட நிலையில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் தமிழக சிபிசிஐடி போலீசார் திணறினர்.
இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தை நாடிய தமிழக சிபிசிஐடி போலீசார், சேலத்தில் இருந்து சென்னை வரை ரயில் பயண தூரம் சுமார் 350 கிலோ மீட்டர் தூரத்தை செயற்கைக்கோள் மூலம் படங்களாக பிடித்து அதில் ரயில் எந்த பகுதியில் வரும் போது துளையிடப்பட்டது என்பதற்கான புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசாவிடம் இருந்து பெற்று தருமாறு உதவி கேட்டனர்.
இதனைத் தொடர்ந்து நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், ரயில் பயணித்த 350 கிலோ மீட்டர் தூரத்தில் எடுக்கப்பட்ட வெவ்வேறான 20க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள் படங்களை அனுப்பியது.
நாசா அனுப்பிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக எந்த இடத்தில் ரயில் மேற்கூரை துளையிட்டு கொள்ளை அடிக்கப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
கிட்டத்தட்ட சுமார் 100 க்கும் மேற்ப்பட்ட செல்போன் டவர்களிலிருந்து 1 லட்சம் போன் அழைப்புகளை தமிழக சிபிசிஐடி காவல்துறை ஆய்வு செய்து. அவற்றில் சில சந்தேகப்படியான அழைப்புகளை சோதனை செய்த போது, 11 நபர்கள் சம்பவம் நடந்த 8-ஆம் தேதி இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்து, மறுநாள் காலை 7 மணிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
விசாரணையில், அவர்கள் அனைவரும் பீகார் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. ஏஜென்ட் ஒருவர் மூலம் வேலைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, அவர்கள் 11 பேரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.