கருணாநிதி மீதான அவதூறு வழக்கு - நீதிமன்றத்தில் மனு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரிய மனுவுக்கு அரசு பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக அரசுக்கு எதிராகவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தும் முரசொலி பத்திரிக்கையில் கேள்வி பதில் பகுதியில் பல்வேறு கருத்துக்களை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாக அவர் மீது 13 அவதூறு வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி காலமானார். இதையடுத்து அவர் மீதான அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

அப்போது கருணாநிதியின் இறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய நீதிபதி சுபாதேவி அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் வழக்கறிஞர் குமரேசன் கருணாநிதியின் இறப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

இதையடுத்து கருணாநிதி மீதான அவதூறு வழக்களை தள்ளுப்படி செய்வது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை அக்டோபர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

More News >>