நடைபாதை வியாபாரிகளுக்கு வட்டி இல்லா தினசரி கடன் திட்டம்: கர்நாடக அரசு
நடைபாதை வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு நாள்தோறும் வட்டி இல்லா கடனை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மத சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குமாரசாமி முதல்வராக பதவியேற்ற பிறகு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், நடைபாதை வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு தினசரி வட்டி இல்லா கடன் வழங்கும் திட்டத்தை அறிமுக செய்ய உள்ளது.
இதுகுறித்து கர்நாடக அமைச்சர் பண்டேப்பா கசெம்பூர் கூறியதாவது: வறுமையில் வாடும் நடைபாதை வியாபாரிகள் கந்து வட்டிக்காரர்களால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். தினந்தோறும் சம்பாதிப்பவர்கள் கந்து வட்டியால் இன்னலுக்கு ஆளாகிறார்கள். காலையில் பணத்தை வாங்கி மாலையில் 10 சதவீத வட்டியுடன் அவர்கள் திருப்பி செலுத்துகிறார்கள்.
அவர்கள் துயரத்தை போக்க நாள்தோறும் கடன் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டத்தின்படி, நடைபாதை வியாபாரிகள் அரசிடம் இருந்து காலையில் பணத்தை பெற்றுக் கொண்டு மாலையில் திருப்பி செலுத்த வேண்டும். இத்திட்டத்தில், தினசரி வட்டி கிடையாது. அல்லது பெயரளவில் வட்டி இருக்கலாம். இத்திட்டம் வியாபாரிகளுக்கு நல்ல பலன் அளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.