ஹெட்போனில் பாட்டுக் கேட்டபடி பாதயாத்திரை: வாலிபர் ரயில் மோதி பலி
வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு புதுக்கோட்டையில் இருந்து பாதயாத்திரை சென்ற வாலிபர் ஹெட்போனில் பாட்டு கேட்டுக் கொண்டே சென்றபோது ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை பகுதியில் உள்ள குமாரிமலையை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் மார்ட்டின் (24). பி.இ., பட்டதாரியான மார்ட்டின் வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவையட்டி மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார்.
இந்நிலையில், மார்ட்டின் நேற்று தனது நண்பர்களுடன் புதுக்கோட்டையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை கிளம்பினார். மார்ட்டின் தனது நண்பர்களுடன் நீடாமங்கலம் - கொரடாச்சேரி இடையே உள்ள கிளரியம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது, மார்ட்டின் தனது செல்போனில் ஹெட்போன் மூலம் பாட்டு கேட்டுக் கொண்டே நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது, தஞ்சாவூரில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற பாசஞ்சர் ரயில் ஒன்று அந்த தடத்தில் வேகமாக வந்துக் கொண்டிருந்தது. இதை கவனிக்காத மார்ட்டின் மீது ரயில் வேகமாக மோதியது. இதில் மார்ட்டின் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.பாதயாத்திரைக்கு சென்ற வாலிபர் ரயிலில் அடிப்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.