பெசன்ட் நகர் வேளாங்கண்ணி திருத்தலம் - போக்குவரத்து மாற்றம்
By SAM ASIR
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 46வது ஆண்டு விழா 2018 ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்குகிறது. அன்று மாலை 5:45 மணிக்கு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா 10 நாட்கள் நடைபெறும். செப்டம்பர் 7ம் தேதி பிரதான விழாவும், 8ம் தேதி நிறைவு விழாவும் நடைபெறும்.
பெசன்ட் நகர் வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு, 2018 ஆகஸ்ட் 29, செப்டம்பர் 2 மற்றும் 7 ஆகிய நாட்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
மாதா சப்பர பவனி வரும் நான்காவது மெயின் ரோடு மற்றும் 3, 2, 6, 7வது அவன்யூக்களில் வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை. எம்.ஜி.சாலை முதல் 7வது அவன்யூ சந்திப்பு வரை மற்றும் 6 முதல் 4வது அவன்யூ சந்திப்பு வரை மற்றும் 4வது மெயின் ரோடு முதல் 3வது அவன்யூ வரைக்கும் மாலை 4 மணியிலிருந்து திருத்தலத்திற்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. எல்.பி.சாலையிலிருந்து சாஸ்திரி நகர் முதலாவது அவன்யூ, தாமாதரபுரம் மற்றும் ஜீவரத்தினம் நகர் வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திற்கு செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
32வது குறுக்குத் தெருவிலுள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் வாகனம் நிறுத்த இடம் உண்டு. பெசன்ட் நகர் மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் அவன்யூக்கள், 16, 17, 21 மற்றும் 22ம் குறுக்குத் தெருக்கள், இரண்டாம் பிரதான சாலை, ஆறாவது அவன்யூ சர்வீஸ் சாலை, பெசன்ட் நகர் 24, 25, 26, 27, 28வது குறுக்குத் தெருக்கள் மற்றும் 6வது அவன்யூ (கோஸி கார்னர் முதல் 5வது அவன்யூ சந்திப்பு வரை) ஒரு பக்கம் வாகனங்கள் நிறுத்த அனுமதி உண்டு.
பிற்பகல் இரண்டு மணி முதல் மாநகர பேருந்துகள் எம்.எல். பூங்கா வழியாக பெசன்ட் அவன்யூவுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது. மாறாக எல்.பி.சாலை, எம்.ஜி.சாலை, பெசன்ட் நகர் முதலாவது பிரதான சாலை வழியாக திருப்பி விடப்படும். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து திருவான்மியூர் செல்லும் பேருந்துகள் சாஸ்திரி நகர் முதல் அவன்யூ மற்றும் எல்.பி. சாலை வழியாகவும், மயிலாப்பூர் மற்றும் கோட்டூர்புரம் செல்லும் பேருந்துகள் பெசன்ட் அவன்யூ சாலை மற்றும் எம்.எல்.பூங்கா வழியாகவும் செல்லலாம்.
வாகன போக்குவரத்து அதிகமாகும் பட்சத்தில் எல்.பி. சாலை, ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும். அப்போது திருவான்மியூரிலிருந்து அடையாறு நோக்கி வரும் வாகனங்கள் இந்திரா நகர் மூன்றாம் அவன்யூ, கஸ்தூரிபா நகர் மூன்றாம் குறுக்குத் தெரு வழியாக சர்தார் பட்டேல் சாலையை அடையலாம்.