ஹெல்மெட் கட்டாயம் - தமிழக அரசு எச்சரிக்கை
இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோட்டார் சட்ட விதிகளின் படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும் அதை அரசு அமல்படுத்தவில்லை என்றும் அதை அமல்படுத்தக் கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த கே.கே ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
ஏற்கனவே, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசாணை வெளியிட்டால் மட்டும் போதாது. அதை நடைமுறைபடுத்த வேண்டும் என்று தமிழக அரசை கண்டித்தனர். பின்னர், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தியது குறித்து காவல் துறை தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது மட்டும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினர். ஹெல்மெட் கட்டாயம் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தது.
இதனை அடுத்து, தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்பவர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.