தேர்தலில் வாக்குச்சீட்டு முறை - அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக பழைய வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தலைமையில் டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 7 தேசியக் கட்சிகள், 51 மாநில கட்சிகள் பங்கேற்றன.
தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, நாடாளுமன்ற அதிமுக குழு தலைவர் வேணுகோபால், திமுக சார்பில் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது, வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சார செலவை குறைத்து உச்சவரம்பு நிர்ணயிப்பது, வாக்காளர் பட்டியலின் வெளிப்படை தன்மை, மின்னணு இயந்திரத்தில் உள்ள நிறைகுறைகள், தேர்தல் ஆணையத்துக்கு கட்சிகளின் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், தேர்தல் நாளுக்கு, இரு தினங்களுக்கு முன்பு இருந்து, அச்சு ஊடகம் மற்றும் பத்திரிகைகளில் அரசியல் விளம்பரம் செய்ய தடை விதிப்பது குறித்து கருத்து கேட்கப்படவுள்ளது. அத்துடன், 48 மணி நேரத்துக்கு முன்பு, சமூக ஊடகங்கள், வலைதளங்களிலும் வேட்பாளர் குறித்த விளம்பரத்தை தடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக, தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக, வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என 70 சதவீத கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கும் வகையில் நாட்டில் உள்ள 30 சதவீதம் வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரங்களுடன் வாக்குச்சீட்டு முறையும் வைக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்களுக்காக அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகளுக்கு உச்சவரம்பு விதிக்கப்பட வேண்டும். தேர்தல் பிரசாரத்துக்காக அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பன போன்ற பல அடுக்கடுக்கான கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் முன் வைத்துள்ளன.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓம் பிரகாஷ் ராவத், அரசியல் கட்சிகளின் கோரிக்கை குறித்து விரைவில் பரிசீலிப்போம் என உறுதி அளித்தார்.