தங்கத்தை குத்தி வந்த ஈட்டி: ஆசிய போட்டியில் தேசிய சாதனை

ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.   தன்னுடைய மூன்றாவது முயற்சியில் 88.06 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்த நீரஜ், புதிய தேசிய சாதனையும் படைத்துள்ளார்.பெண்களுக்கான பல தடை ஓட்டத்தில் (steeplechase) 3000 மீட்டர் தொலைவை 9:40:03 நிமிடங்களில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை சுதா சிங் வென்றுள்ளார்.   பெண்களுக்கான நீளம் தாண்டும் போட்டியில் இந்தியாவின் நீனா வரகில் 6.51 மீட்டர் தாண்டினார். நான்காவது வாய்ப்பில் அதிக தூரம் தாண்டிய நீனா, வெள்ளிப் பதக்கத்தை தட்டி வந்துள்ளார்.ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் திருப்பூரைச் சேர்ந்த தருண் அய்யாசாமி, இந்தியாவுக்காக வெள்ளி வென்றுள்ளார்.   கத்தார் நாட்டின் அப்டெர்ராஹ்மன் சம்பா முதலிடத்தை பிடித்தார். 48.96 கால அளவில் 400 மீட்டரை கடந்து இரண்டாமிடம் பிடித்த தருண், தற்போது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தருணுக்கு எட்டு வயதாகும்போது அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது தாய் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்து தருணை வளர்த்து ஆளாக்கியுள்ளார். தருண், தான் பெற்ற பதக்கத்தை தாய்க்கு சமர்ப்பித்துள்ளார்.   பெண்கள் ஒற்றையர் பூப்பந்து (பேட்மிண்டன்) போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், அரையிறுதியில் சீன தைபே வீராங்கனை தாய் டிஸூவிடம் 17 - 21, 14- 21 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியுற்றார். எனவே சாய்னா, வெண்கல பதக்கத்துடன் திருப்தியடைய வேண்டியதாயிற்று.    இந்தியா 8 தங்கப்பதக்கங்கள், 13 வெள்ளிப் பதக்கங்கள், 20 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 41 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
More News >>