இன்குலாப்புக்கு சாகித்ய அகாடெமி விருது... ஏற்க மறுத்த குடும்பத்தினர்!

மக்கள் கவிஞர் இன்குலாப்பின் ‘காந்தள் நாட்கள்’ படைப்புக்கு அறிவிக்கப்பட்ட சாகித்ய அகாடெமி விருதை ஏற்க அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

அடக்குமுறை, சாதி, மதம், ஆகியவற்றிற்கு எதிராக குரல் எழுப்பியவர், மறைந்த கவிஞர் இன்குலாப். பொதுவுடைமை சித்தாந்தங்களை தம் படைப்புகளில் வெளிப்படுத்திய கவிஞர்.

இவர் வெள்ளை இருட்டு, சூரியனைச் சுமப்பவர்கள், ஒவ்வொரு புல்லையும் உள்பட பல நூல்களை எழுதியுள்ளார்.

கீழ்வெண்மணி சம்பவத்தையொட்டி இவர் எழுதிய ‘மனுசங்கடா நாங்க மனுசங்கடா’ என்ற கவிதை இன்றளவும் மக்கள் மத்தியில் பாடப்படும் பாட்டாக இருந்து வருகின்றது.‘

மக்களின் மனக்குமுறல்களை படைப்புகளாக வெளிப்படுத்திய இன்குலாப் கடந்தாண்டு டிசம்பவர் 1-ஆம் தேதி காலமானார். வாழ்ந்த போது, அரசின் அங்கீகாரத்தை இன்குலாப் ஏற்க மறுத்துவந்தார்.

‘விருதுகள் கௌரவப்படுத்தும் பிணமாக வாழ்ந்தால்....என் போன்றோரை...' என்று எனக்கு விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்த்து எழுதவில்லை என இன்குலாப் கூறியுள்ளார். அவர் வழி பின்பற்றும் குடும்பத்தினர், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சாகித்ய அகாடெமி விருதை ஏற்க மறுத்துவிட்டனர்.

இந்த விருதை ஏற்றால், இன்குலாப் வாழ்ந்த வாழ்க்கைக்கும், எழுதிய எழுத்துக்களுக்கும் துரோகம் இழைப்பதாகும் என்றும், இன்குலாப்பிற்காக உள்ள பரவலான மக்கள் வாசக வட்டம் தான் அவருக்கான அங்கீகாரமாக இருக்கும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

More News >>