பாஜக, வாஜ்பாயை சிறுமைப்படுத்துகிறது - சிவசேனா குற்றச்சாட்டு

அஸ்தியை கரைப்பதில் அரசியல் சாயம் பூசி மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறப்பிற்கு பின் அவரை சிறுமைப்படுத்தும் முயற்சிகள் நடக்கிறது சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் உள்ள பல்வேறு நதிகளில் கரைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில், “முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்தபின் உருவான அரசியல் வெற்றிடத்தை மோசமான மற்றும் பொருத்தமற்ற வழிகளில் நிரப்புவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

பாஜக மூத்த தலைவர்களுக்கு எந்த ஒரு மரியாதையும் இல்லை. ஆனால் இறந்த மூத்த தலைவர்களின் அஸ்தி மதிப்பு மிக்கதாக கருதப்படுகிறது. வாஜ்பாய் இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளாலும் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக கருதப்பட்டார். இதனால் தான் அவரின் இறுதி ஊர்வலத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர். ஆனால் இறப்பிற்கு பின் அவரை சிறுமைப்படுத்தும் முயற்சிகள் நடக்கிறது.

அவர் அஸ்தி கரைக்கப்படும் நிகழ்ச்சி ஒரு கட்சியால் நடத்தப்படுவதாக இருக்கக்கூடாது. அனைத்து கட்சிகளும் உள்ளடக்கிய ஒரு தேசிய நிகழ்வாக அது நடந்திருக்கவேண்டும். ஜவகர்லால் நேருவும், அடல்பிகாரி வாஜ்பாயும் அரசியல் வட்டத்திற்கு அப்பாற்பட்ட மிகப்பெரிய தலைவர்கள் ஆவர். ஆனால் வாஜ்பாயின் அஸ்தியை கரைக்கும் நிகழ்ச்சிக்கு அரசியல் சாயம் பூசுவது நல்லதல்ல.

சில அமைச்சர்களும், கட்சியின் பொறுப்பாளர்களும் வாஜ்பாயின் அஸ்தி கலசத்தை வாங்கிக்கொண்டு, உலக கோப்பையை வென்றது போன்ற உணர்வை வெளிப்படுத்துகின்றனர். எப்படி அவர்களால் மகிழ்ச்சியுடன் அவரின் அஸ்தியை வாங்க முடிகிறது? இது டி.வி. கேமராக்களில் பதிவாகிறது. சிலர் அந்த அஸ்தி கலசத்துடனேயே ‘செல்பி’ எடுத்து கொள்கின்றனர். இது வாஜ்பாயின் மீது நீங்கள் வைத்துள்ள பாசத்தின் முகமூடியற்ற வெளிப்பாடாகும்.

வாஜ்பாயின் அஸ்தி அரசியலாக்கப்படுவதை கண்டு அவரின் குடும்பத்தினர் கூட வருத்தப்படுவார்கள். இது ஒரு தீவிரமான பிரச்சினையாகும். இனி யாருக்கும் இதுபோல் நிகழக்கூடாது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

More News >>