மேகதாதுவில் அணை... கர்நாடகா வேண்டுகோள்
ஒரு ஆண்டில் தர வேண்டிய காவிரி தண்ணீரை மூன்று மாதத்தில் தந்து விட்டோம். எனவே, வரும் காலத்தில் மேகதாது பகுதியில் அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது.
காவிரியில் இருந்து, கர்நாடகா தமிழகத்திற்கு ஆண்டுக்கு 177.3 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் மாதம் முதல் மே மாதம் வரை இதற்கான காலகட்டமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒவ்வொரு மாதமும் கர்நாடகா எவ்வளவு நீர் தர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் நடப்பு ஆகஸ்ட் மாதம் வரை 310.6 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா காவிரியில் திறந்து விட்டுள்ளது. ஒரு ஆண்டு முழுவதும் தர வேண்டிய தண்ணீரை விட இப்போதே கூடுலாக 133.3 டி.எம்.சி., நீரை கர்நாடகா வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி ஜூனில், 9.2; ஜூலையில், 31.9; ஆகஸ்ட் மாதத்தில் 46.1. டி.எம்.சி., நீரை தான் கர்நாடகா வழங்க வேண்டும். ஆனால், பல மடங்கு கூடுதல் நீரை வழங்கி விட்டதாக கர்நாடகா அதிகாரிகள் கூறி வருகின்றனர். அத்துடன் தமிழகத்திற்கு வழங்கிய தண்ணீரில், 250 டி.எம்.சி., நீர் வீணாக கடலுக்கு சென்று விட்டது என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அதனால், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட வேண்டும் எனவும் கர்நாடக அதிகாரிகள் கூறி வருகின்றனர். இதன் மூலம் 67 டி.எம்.சி., தண்ணீரை சேமிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். கர்நாடக நீர்பாசன துறையின் முதன்மை செயலாளர் ராகேஷ் சிங் கூறுகையில், “வரும் காலத்தில் காவிரியில் கூடுதல் நீர் கிடைக்கும் என்பது நடப்பு ஆண்டு பெய்த மழை மூலம் அனுபவமாக கிடைத்துள்ளது.
எனவே, மின்சாரம் தயாரிப்பு, பெங்களூருவுக்கு குடிநீர் தருவது ஆகிய காரணங்களுக்காக மேகதாதுவில் அணை கட்ட வேண்டியது அவசியமாகிறது. மேலும் மேகதாது அணை நீரை தமிழகமும் பயன்படுத்தி கொள்ள முடியும்.'' என்று கூறியுள்ளார்.