இருப்பவர்கள் நிதி... இல்லாதவர்கள் ஆதரவு... துரைமுருகன் கலகல
பொருளாளரின் வேலையே நிதி திரட்டுவது தான் இருப்பவர்கள் நிதி கொடுங்கள் இல்லாதவர்கள் ஆதரவு கொடுங்கள் என்ற துரைமுருகனின் பேச்சால் திமுக பொதுக்குழு கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
திமுக பொருளாளர் துரைமுருகன் உரையாற்றிய போது, 1962-லிருந்து மேடை மேடையாகப் பேசி இன்னும் பேசிக்கொண்டிருக்கிறேன். இன்று என்னால் பேச முடியவில்லை. மாபெரும் இயக்கமான திமுகவில் பொருளாளர் பதவிக்கு என்னை உயர்த்தி வைத்துள்ளீர்கள். நான் அந்தப் பதவிக்குரிய தகுதியை முயன்று பெற்றுக்கொள்வேன்" என்று கூறினார்.
"மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்து அந்தப் பதவியை ஏற்கவில்லை. சிலுவையைச் சுமந்துகொண்டு தலைவர் பதவி ஏற்றார். கட்சிக்குள்ளேயே ஏராளமான பிரச்சினைகள். ஆனால் அனைத்தையும் அவர் கடந்தார்."
"ஆலமரத்தின் அடிமரமான கருணாநிதி இன்று விழுந்து போனாலும் அதன் விழுது ஸ்டாலின் அடிமரமாகத் தாங்குகிறார். கட்சியில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. அண்ணா, கருணாநிதி அடுத்து திமுகவை வழி நடத்தும் மகத்தான பணி ஸ்டாலினுக்கு வந்துள்ளது. திமுக வரலாற்றில் புகழ்பெற்ற மனிதர் ஸ்டாலின்."
"கருணாநிதியே கொடுத்த பதவியாக கருதி ஏற்கிறேன். பொருளாளர் வேலை நிதி சேகரிப்பது தான், நிதி கொடுங்கள்... இல்லாதவர்கள் ஆதரவு கொடுங்கள்" என துரைமுருகன் பேசியதும் குபீரென கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.