பழனி கோயில்... ரோப் கார் சேவை மீண்டும் தொடங்குகிறது
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு மலை அடிவாரத்திலிருந்து மேலே கோயிலுக்குச் செல்வதற்கு 'ரோப் கார்' இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜூலை 12-ஆம் தேதி பராமரிப்பு பணிகள் தொடங்கியதால், இந்தச் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு வழிகளில் இயக்கப்படும் எட்டு பெட்டிகள் கொண்ட 'ரோப் கார்' முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மலையின் மீது ஏறி கோயிலுக்கு வருவதற்கு அதிக உதவியாக இருந்து வருகிறது.
மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்பில் கயிறு போன்ற இரும்பு கம்பி, ஒன்றரை லட்சம் செலவில் நிலையத்திற்கான உபகரணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மலையடிவாரம் மற்றும் மலையின் மேலே உள்ள 'ரோப் கார்' நிலையங்களில் வண்ணப்பூச்சு வேலைகள் நடைபெற்றுள்ளது. மூங்கில் கூடைகளில் பயணிகளை இறக்கும் அவசர கால மீட்பு ஒத்திகையும் நடந்தது.
பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் ஐம்பது நாட்கள் கழித்து, பழனி முருகன் கோயிலுக்கு ஆகஸ்ட் 30ம் தேதி முதல் மீண்டும் 'ரோப் கார்' சேவை தொடங்கும் என்று கூறப்படுகிறது.