மு.க. ஸ்டாலினாகிய நான் இன்று புதிதாய் பிறந்துள்ளேன்...!
திமுக-வின் கனவை நினைவாக்க நான் இன்று புதிதாய் பிறந்துள்ளேன் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.
திமுக தலைவராக பதவியேற்ற பிறகு பேசிய மு.க.ஸ்டாலின், "திமுக தலைவராக நான் பொறுப்பேற்றதை பார்க்க கருணாநிதி இல்லையே என்பதே எனது ஒரே குறை. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை போல் மொழி ஆளுமை எனக்கு கிடையாது. அவரை போல் எனக்கு பேச தெரியாது. ஆனால், எதையும் முயன்று பார்க்கும் துணிவு பெற்றவன்."
"திமுகவின் கனவை நிறைவேற்ற இன்று புதிதாய் பிறந்திருக்கிறேன். நீங்கள் பார்க்கும்... கேட்கும் ஸ்டாலின் வேறொருவன். என்னை உழைப்பாளி என கருணாநிதி பாராட்டினார். வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொண்டே இருப்பேன். சொந்த நலன்களை மறந்து தமிழக மக்களின் நலனுக்காக ஒன்று சேர்ந்து உழைப்போம்."
"சுயமரியாதை கொள்கைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து சவாலானது. மக்கள் ஆட்சியின் மாண்பை சீர்குலைக்கும் செயல் ஆரம்பமாகியுள்ளது. நாடு முழுவதும், காவி வண்ணம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும்."
"தலைவராகும் தகுதி எனக்கு இருப்பதாக முதலில் சொன்னவர் அன்பழகன். தந்தையிடம் நற்பெயர் வாங்குவது 100 மடங்கு கடினம். பெரியப்பாவான அன்பழகனிடம் நல்ல பெயர் வாங்குவது 200 மடங்கு கடினம்."
"திமுகவில் அனைவரும் சமம். தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக தொண்டர்கள் இருக்க வேண்டும். தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தலைமை செயல்படும்."
"50 ஆண்டு வரலாற்றை என் சிறிய இதயத்தில் ஏற்றிவிட்டு கருணாநிதி ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். உங்களை நம்பித்தான் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளேன். தைரியம், நம்பிக்கைக்கு காரணம் கருணாநிதி தான்." என ஸ்டாலின் தெரிவித்தார்.