கள்ளிக்காட்டு இதிகாசம் சிறந்த புத்தகமாக தேர்வு...
இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' இந்தாண்டின் சிறந்த புத்தகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வகதைதான் கள்ளிக்காட்டு இதிகாசம். மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொல்லும் படைப்பு இந்த நாவல்
2001 ஆம் ஆண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் வெளியிடப்பட்டது. வட்டார வழக்கோடு எழுதப்பட்ட அந்த நாவலுக்கு 2003ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இந்த நாவல் 23 மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என சாகித்ய அகாடமி தெரிவித்திருந்தது. முதற்கட்டமாக இந்த புத்தகத்தின் இந்தி மொழிப்பெயர்ப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இந்தி மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கள்ளிக்காட்டு இதிகாசம் இந்த ஆண்டின் சிறந்த புத்தகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வைரமுத்து கூறுகையில், இது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை எனவும், இந்த விருது தமிழக மக்களுக்கே சொந்தம் எனவும் தெரிவித்துள்ளார்.