இந்தியா 50! - ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்க எண்ணிக்கை
By SAM ASIR
இந்தோனேசியாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. பத்தாவது நாளான செவ்வாயன்று இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் மொத்தம் ஒன்பது பதக்கங்களை வென்றனர்.
ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் முதல் இரண்டு இடங்களை இந்தியாவின் மஞ்ஜித் சிங்கும் ஜின்சன் ஜாண்சனும் பிடித்தனர். ஆகவே, இந்தப் போட்டியில் தங்கமும் வெள்ளியும் இந்தியாவுக்கு கிடைத்தன.
பெண்களுக்கான பேட் மிண்டன் இறுதிப் போட்டியில் சீன தைபே வீராங்கனை தாய் டிஸூவிடம் தோல்வியுற்ற பி.வி. சிந்து, வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்தியாவின் பெண்கள் வில்வித்தை அணி, இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றது. 228 - 231 என்ற புள்ளி கணக்கில் தென் கொரிய அணி முதலிடம் பெற்றது. ஆண்கள் பிரிவிலும் தென் கொரிய அணியே முதலிடம் பெற்றது. இந்திய ஆண்கள் வில்வித்தை அணி இரண்டாமிடத்தோடு வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். 4 X 400 மீ தொடர் கலப்பு ஓட்டத்தில் இந்திய அணி இரண்டாம் இடம் பெற்றது. ஆகவே, தொடர் ஓட்டம் மூலம் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்த ஆண்டு புதிதாக இடம் பெற்ற விளையாட்டு, குராஷ். மத்திய ஆசியாவில் அதிகமாக விளையாடப்படும் இந்த விளையாட்டு இன்னும் இந்திய அளவிலேயே சரியான அங்கீகாரம் பெறாமல் இருந்தது. ஒரு வகை மல்யுத்தப் போட்டியான இதில் 19 வயது பிங்கி பால்ஹ்ரா பெண்கள் குராஷ் - 52 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதற்கான பயிற்சிக்காக உஸ்பெகிஸ்தான் செல்லவும், போட்டிக்கான உபகரணங்களை வாங்கவும் தன்னுடைய கிராம மக்கள் நிதி திரட்டி ஒன்றே முக்கால் லட்சம் ரூபாய் கொடுத்ததாக வெள்ளி வென்ற நங்கை, பிங்கி பால்ஹ்ரா கண்ணீர் மல்க கூறினார்.
குராஷ் விளையாட்டில் அதே 52 கிலோ மங்கையர் பிரிவில் மலபிரபா யெல்லப்பா வெண்கலம் வென்றுள்ளார். ஆண்கள் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி, அரையிறுதியில் கொரிய அணியிடம் 0 - 3 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்ந்தது. எனவே, வெண்கலமே கிடைத்தது.
9 தங்கப் பதக்கங்கள், 19 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 22 வெண்கலப் பதக்கங்களோடு மொத்தம் ஐம்பது பதக்கங்களை வென்று இந்தியா பதக்கப் பட்டியலில் மீண்டும் எட்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது