இப்படி பண்ணிட்டீங்களேம்மா...? பறிபோனது சிங்கப்பூர் வேலை

சிங்கப்பூரில் பணியாற்றி வந்த ஒருவர் முகநூலில் போட்ட பதிவு அவரது வேலைக்கு வேட்டு வைத்துள்ளது.சிங்கப்பூரை தலைமையகமாக கொண்ட டிபிஎஸ் (DBS) வங்கியில் அவிஜித் தாஸ் பட்நாயக் என்பவர் பணியாற்றி வந்தவர். இந்தியரான அவர், நிரந்தர சிங்கப்பூர் குடியுரிமை பெற்று பத்து ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறார்.     கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி, அவிஜித், சிங்கப்பூர் வாழ் மற்றும் சிங்கப்பூர் இந்தியர்களின் முகநூல் குழுவில் (Singapore Indians & Expats group) ஒரு பதிவினை போட்டார். அந்தப் பதிவில், சிங்கப்பூர் கொடி கிழிந்து, கீழுள்ள இந்திய தேசிய கொடி தெரிவதுபோன்ற காட்சி கொண்ட டி-ஷர்ட்டின் படத்தினை பதிவு செய்து, அதனுடன் 'இன்னும் என் இதயம் இந்தியனாகவே இருக்கிறது' என்று பொருள்படும் ஹிந்தி வார்த்தைகளையும் (Phir Bhi dil hai)பதிவிட்டிருந்தார். இந்தக் குழு 11,000 உறுப்பினர்களை கொண்டது. அவரது பதிவு ஒரு பிரபலமான ஹிந்தி திரைப்பட பாடலையும் குறிப்பதாக இருந்தது.   அவிஜித்தின் பதிவை குறித்து பெரிய எதிர்ப்பு எழுந்தது. ஆகஸ்ட் 19ம் தேதி, டிபிஎஸ் வங்கியின் முகநூல் பக்கத்திலும் அவிஜித் குறித்து புகார் செய்யப்பட்டது. "தன்னுடைய பதிவு மோசமானது என்று தெரிய வந்ததும் அவர் அதை நீக்கிவிட்டார். அவருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன" என்று வங்கி தரப்பில் கூறப்பட்டது.   பின்னர் வங்கி தரப்பிலிருந்து வெளியாகியுள்ள தகவலின்படி, சம்பவம் குறித்து விசாரிக்க ஆகஸ்ட் 24ம் தேதி ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டதாகவும், இப்போது அவிஜித் டிபிஎஸ் வங்கியில் பணியில் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. "டிபிஎஸ் தங்கள் பணியாளர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அனுமதிப்பதில்லை" என்று கூறிய அதன் செய்தி தொடர்பாளர், அவிஜித் பட்நாயக், பணியினை ராஜினாமா செய்தாரா அல்லது பணியிலிருந்து நீக்கப்பட்டாரா என்ற கேள்விக்கு விளக்கமாக பதிலளிப்பதை தவிர்த்து விட்டார்.   சிங்கப்பூர் சட்டத்தின்படி, சிங்கப்பூர் தேசிய கொடியை அவமதிப்பவர்களுக்கு அதிக பட்சமாக 1000 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்க முடியும்.   'இரும்பு இருக்கிறவன் கையும் சிரங்கு இருக்கிறவன் கையும் சும்மா இருக்காது'... இந்தப் பழமொழியில் இனி ஃபேஸ்புக் இருக்கிறவன் கையையும் சேர்த்துக்கொள்ளலாம்!
More News >>