கேரளா விரைகிறது பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு
கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செயல்படுவது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு இன்று விரைகிறது.
கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் சூழ்ந்து 370 பேரை பலி கொண்டது. மேலும், சுமார் 19,500 கோடிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, மழை குறைந்து வரும் காரணத்தால் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு இன்று கேரளா சென்று ஆய்வு நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தால் சூழ்ந்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் பணிகளை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.