விதிகளை மீறி மருத்துவ பயிற்சி... கருத்து கோரும் நீதிமன்றம்
மருத்துவ பட்டயப் பயிற்சி வகுப்புகளை நடத்த தடை கோரிய மனுவுக்கு, மருத்துவக் கல்வி இயக்குனரகம் விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.
தமிழக மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் சார்பில் ஆறு மாத மருத்துவ பட்டய பயிற்சி வகுப்புகளை நடத்தப்படுகிறது.
இந்த வகுப்புகளுக்கு ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களை விதிகளை மீறி மருத்துவக் கல்வி இயக்குனரகம் சேர்த்துள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க கோரியும், மருத்துவ மேற்படிப்பு மாணவர் செபஸ்டியன் ஆண்டனி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘விதிகளின்படி ஒரு ஆசிரியருக்கு ஒரு மாணவர் என்ற விகிதாச்சாரத்தின் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க வேண்டும்.’
‘தமிழகத்தில் 85 புகழ் பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே உள்ளதால் 85 மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும்’ எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த விதிகள் முழுமையாக மீறப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து மனு குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.