ஸ்டாலின் உரை... சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி - திருநாவுக்கரசர்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பேச்சு, கூட்டணி குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருந்ததாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் பரவியது. இதனால் அரசியலில் எதிரும் புதிருமாக உள்ள திமுகவும் பாஜகவும் நெருக்கம் காட்டுவதாகவும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக செல்ல இருப்பதாகவும் யூகத்தின் அடிப்படையில் கருத்துகள் எழுந்தன.
இதனிடையே ஆகஸ்ட் 28ஆம் நடந்த திமுக பொதுக்குழுவில் பேசிய ஸ்டாலின், மதவெறியால் ஜனநாயக மாண்பை சீர்குலைக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபடுகிறது, நாடு முழுவதும் காவி வண்ணம் பூச நினைக்கும் மோடிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்" என கடுமையாக விமர்சித்து பேசினார்.
இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர், "அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க வாய்ப்பு இல்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்ற பாஜகவின் ஆசை நிறைவேறாது."
"அமித்ஷா வராததால் திமுக விரக்தி அடையாது. வராதது அவர்களுக்கு தான் நஷ்டம். திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதை ஸ்டாலினின் பொதுக்குழு உரை உறுதிசெய்துள்ளது. கூட்டணி குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஸ்டாலினின் உரை அமைந்துள்ளது" எனக் கூறியுள்ளார்.