சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் ரெய்டு
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ட்ரைஜென் மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் பெங்களூரு, சென்னையில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில், இன்று காலை 7 மணி முதல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், வருமான வரி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் மும்பை, பெங்களூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள இந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சோதனையில் நிறுவனத்தின் ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யுனைடெட் என்கிற மென்பொருள் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்திலும், சோழிங்கநல்லூரில் உள்ள யுனைட்டெட் மென்பொருள் நிறுவன அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையின் இறுதியிலேயே முழு விவரங்களும் தெரியவரும்.