ஹரிகிருஷ்ணா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம்: தெலுங்கானா அறிவிப்பு
சாலை விபத்தில் உயிரிழந்த ஹரிகிருஷ்ணாவின் இறுதி ஊர்வலம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் முன்னள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகன் நடிகர் நந்தமுரி ஹரிகிருஷ்ணா. இவர், ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமாவார். நலகொண்டா மாவட்டத்தில் உள்ள நர்கெட்பள்ளி - அட்டன்கி நெடுஞ்சாலையில் ஹரிகிருஷ்ணாவின் கார் சென்றுக் கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மீது மோதியதில் பயங்கர விபத்து நேரிட்டது.
இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த ஹரிகிருஷ்ணாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த செய்தியை கேட்டு தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலமே சோகத்தில் மூழ்கியுள்ளது. தற்போது, ஹரிகிருஷ்ணாவின் உடலுக்கு பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஐதராபாத் நகரின் அருகே முருதுழுகுடா என்ற பகுதியில் உள்ள என்.டி.ஆர் குடும்பத்துக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.
இதனால், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பியாக பணியாற்றிய ஹரிகிருஷ்ணாவின் இறுதி ஊர்வலம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.