விஷவாயு தாக்கி தமிழக தொழிலாளர்கள் 3 பேர் பலி
கோவை: தங்க நகை தயாரிப்பு தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும்போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவை பாதர்ரேண்டி வீதியில் ஸ்ரீபத்மராஜா ஜூவல்லரி என்ற தங்க நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வருபவர் ரவிசங்கர்(50). இந்த தொழிற்சாலையில் 16 பேர் வேலை செய்து வருகின்றனர்.
தொழிற்சாலையில், நகைகளை தயாரிக்கும்போது தங்கம் சுத்தம் செய்வதற்காக கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. அந்த கெமிக்கலில் சுத்தம் செய்யும்போது தங்க துகள்களும் சேர்ந்து வெளியேறும். இந்த கழிவு நீர், தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் தொட்டிக்கு செல்லும். அங்கு, 6 மாதத்திற்கு ஒரு முறை தொட்டியை சுத்தம் செய்து தங்க துகள்களை தனியாக பிரிக்கும் பணி நடக்கும்.
அதன்படி, நேற்று நள்ளிரவு தொழிற்சாலையின் சின்டெக்ஸ் தொட்டியை சுத்தம் செய்வதற்காக வேடப்பட்டியை சேர்ந்த கவுரிசங்கர்(21), ரத்தினபுரியை சேர்ந்த ஏழுமலை(23), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(28) ஆகியோர் சென்றனர். பின்னர், தங்களது பணியை தொடங்கினர்.
அப்போது, முதற்கட்டமாக தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியே எடுத்தனர். இதன் பிறகு சற்று ஓய்வெடுத்த மூன்று பேரும் சுமார் 1.30 மணியளவில் மீண்டும் வேலையை தொடங்கி உள்ளனர். இதற்காக, கவுரிசங்கர், ஏழுமலை ஆகியோர் தொட்டிக்குள் இறங்கினர். வெகு நேரம் ஆகியும் இருவரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த ராதாகிருஷ்ணன் தொட்டிக்குள் பார்த்தபோது இருவரும் விஷவாயு தாக்கி மயங்கி இருப்பது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ராதாகிருஷ்ணன் சத்தம்போட்டதை அடுத்து, அங்கு பணியில் இருந்த சூர்யா(23) என்ற இளைஞர் தொட்டிக்குள் குதித்து இருவரையும் காப்பாற்ற முயன்றார். ஆனால், சூர்யாவும் அதில் விஷவாயு தாக்கி மயங்கினார்.
மேலும் அதிர்ச்சியடைந்த ராதாகிருஷ்ணன் பலத்த சத்தம் போட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அந்நிறுவன ஊழியர்கள் இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தொட்டியை கவிழ்த்து மயங்கிய நிலையில் மூன்று பேரையும் மீட்டனர். இதில், கவுரிசங்கர் மற்றும் ஏழுமலை சம்பவ இடத்திலேயே இறந்தனர் என்பது தெரியவந்தது. மேலும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சூர்யாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி சூர்யா அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.