வாழ்த்து மழையில் நனையும் மு.க.ஸ்டாலின்!

திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் பலர் நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா இல்லத்திற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் சென்றார். அவரிடம் வாழ்த்து பெற்று வந்தார். பொருளாளர் துரைமுருகனும் உடனிருந்தார்.

பின்னர் அங்கிருந்து அறிவாலயம் வந்த திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகனை ஆர்.எம்.வீரப்பன், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற உறுப்பினர் வசந்த குமார் மற்றும் கோபண்ணா , எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பொன்னாடை போர்த்தி மரியாதை செய்த தலைவர்கள், ஸ்டாலினுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் பேசிய பீட்டர் அல்போன்ஸ், "பாஜகவின் மதவாத மற்றும் வகுப்புவாத அரசியலை எதிர்த்து திமுக தொடர்ந்து போராடும். காங்கிரஸ் கட்சி எப்போதும் திமுகவுக்கு துணை நிற்கும்" என தெரிவித்தார்.

இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை மூலம் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

More News >>