48 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம்: அசத்திய அர்பிந்தர் சிங்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான டிரிப்பிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவின் அர்பிந்தர் சிங் 16.77 மீட்டர் தாண்டி தங்கம் வென்றுள்ளார்.
இதற்கு முன்பு 1970 ஆண்டு இந்தியாவின் மொஹிந்தர் சிங் கில் 16.11 மீட்டர் தாண்டி தங்கம் வென்ற பிறகு, 48 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இந்தியா ஆண்கள் டிரிப்பிள் ஜம்ப் போட்டியில் தங்கத்தை ருசித்துள்ளது.
பெண்கள் ஹெப்டத்லான் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னா பர்மன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
சீன மற்றும் ஜப்பானிய வீராங்கனைகளை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களுக்குத் தள்ளி ஸ்வப்னா இந்தியாவுக்கு தங்கத்தை கொண்டு வந்துள்ளார்.
பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் டுடீ சந்த், வெள்ளிப் பதக்கம் வென்றார். 200 மீட்டர் தூரத்தை 23.20 விநாடிகளில் கடந்து இந்த வெற்றியை அவர் பெற்றுள்ளார்.
இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி, அரையிறுதியில் தென் கொரிய அணியிடம் தோற்றது. ஆகவே இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.
11 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.