அரசியலில் ஸ்டாரங்காக அச்சாரம் போடும் விஷால்!
நடிகர் விஷால், ரசிகர் மன்றத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றி, மிக ஸ்டாரங்காக அரசியலில் அச்சாரம் போட்டுள்ளார்.
கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கமல், ரஜினி, விஜய் வரிசையில், அதிரடியாய் இணைந்து ஆச்சர்யப்படுத்தியவர் நடிகர் விஷால்.
ரஜினி, விஜய் இருவரும் தயங்கி தயங்கி அரசியல் பேசும் நேரத்தில் சடாரென ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஏற்கெனவே நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் நடந்த தேர்தல்களில் எல்லாம் விஷாலின் அணியே வெற்றி பெற்றிருந்ததால், விஷாலின் மீது எல்லோரின் பார்வையும் திரும்பியது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது வேட்புமனு ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நிராகரிக்கப்பட்டது. அதன் பிறகு சில நாட்கள் அமைதியாய் இருந்த விஷால், 'இரும்புத்திரை' படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் மீண்டும் கொளுத்தி போட்டுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், ரசிகர் மன்றத்தை மக்கள் நல இயக்கமாக பெயர் மாற்றியதோடு, அணி சேர்வோம், அன்பை விதைப்போம்’ என்ற வாசகத்துடன் கூடிய கொடியையும் விஷால் அறிமுகப்படுத்தினார்.
பின்னர் பேசிய விஷால், "வீதியில் நடக்கும் பிரச்னையைப் பார்த்து கேள்விகேட்காவிட்டால் பிணத்துக்குச் சமம். நம் நாட்டில் கொத்தடிமைகள் இன்னும் உள்ளார்கள். சோதனைகளைத் தாண்டி சாதனைகள் செய்யும்போது சந்தோஷம் ஏற்படும்"
"அரசியல் என்பது பணம் சம்பாதிக்கும் இடமாக மாறிவிட்டது. நிஐ வாழ்க்கையில் மக்களுக்கு நல்லது செய்யும் அனைவரும் அரசியல்வாதிகளே. அரசியல் என்பது மக்கள் பிரச்னையைத் தீர்ப்பதுதான்" என வசனம் பேசியுள்ளார் விஷால்.
ஏற்கனவே கைதேர்ந்த அரசியல்வாதிகளான ராதாரவி மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு எதிராக காய்கள் நகர்த்தி நடிகர் சங்கத்தையும், தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்றியவர்தான் விஷால். எனவே பொறுத்திருந்து பார்க்கலாம் அரசியலில் அவரின் காய்நகர்த்தல்கள் எப்படி இருக்கப் போகிறது என்று..