மதிப்பு நீக்கம் செய்யப்பட்டதால் திரும்பி வந்த பணம் - ரிசர்வ் வங்கி அறிக்கை
மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட இந்திய ரூபாய் தாள்களில் 99.3 சதவீதம் திரும்பி வந்து விட்டதாக இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. 0.7 சதவீதம், அதாவது மொத்தமாக நூறு ரூபாய் என்று வைத்துக்கொண்டால் 70 பைசா மட்டுமே திரும்பவில்லை.
2016 நவம்பர் மாதம் மத்திய அரசு அப்போது புழக்கத்தில் இருந்த 1,000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவித்தது. அவற்றை திரும்ப வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
2016 நவம்பர் 8-ஆம் தேதியன்று புழக்கத்தில் இருந்த 15.41 லட்சம் கோடி ரூபாயில் 15.3 லட்சம் கோடி பணம் வங்கிகளில் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. 11,000 கோடி மதிப்புள்ள பணம் மட்டும் திரும்பவில்லை.
கறுப்புப் பணம் மற்றும் கள்ளநோட்டுகளை ஒழிப்பதற்காக பணமதிப்பழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் 2016 - 17 காலத்துடன் ஒப்பிடும்போது 2017 - 18 காலகட்டத்தில் 50 ரூபாய் தாள்களில் கள்ள நோட்டுகள் 154 சதவீதமாக உயர்ந்துள்ளதாம்.
புதிதாக வெளியிடப்பட்ட ரூபாய்தாள்களில் முந்தைய ஆண்டுடன் ஒப்புநோக்க 2000 ரூபாய்தாள்களில் போலிகள் 2,710 சதவீதமாகவும், புதிய 500 ரூபாய்தாளில் போலி 4,871 சதவீதமாகவும் உள்ளது.
மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய்தாள்கள் தனித்தனியாக பரிசீலிக்கப்பட்டு, எண்ணப்படும் பின்னர் அழிக்கப்பட்டுள்ளன. இதற்கென அதிக எண்ணிக்கையில் பணம் எண்ணும் இயந்திரங்கள் வாங்கப்பட்டதுடன் கூடுதல் எண்ணிக்கையில் பணியாளர்களும் அமர்த்தப்பட்டனர்.
"மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய்தாள்களை பரிசீலிக்கும் பணி வெற்றிகரமாக முடிந்துள்ளது," என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.