மலரும் முன் கருகும் பெண் குழந்தைகள்!

ஒசூர் அருகே உயர்கல்வி படிக்கும் வசதியில்லாததால், மாணவிகள் குழந்தை தொழிலாளராகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்பாரினிற் பெண்கள் நடத்தவந்தோம்எட்டு மறிவினில் ஆணுக்கிங் கேபெண்இளைப்பில்லை காணென்று கும்மியடி" என்ற பாரதியாரின் கவிதை வரிகளுக்கு ஏற்ப, பெரும்பாலான துறைகளில் பெண்கள் சாதித்து வருகின்றனர்.

எனினும், இன்னும் ஒரு சில குக்கிராமங்களில் பெண் பிள்ளைகள் உயர்கல்வியை கூட தொடர முடியாத சூழல் நிலவுகிறது.

இதற்கு விதிவிலக்கல்ல கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகிலுள்ள தொளுவபெட்டா கிராமம். இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதியின் நடுவே இருக்கும் இந்த கிராமத்தில், இன்னும் வளர்ச்சியின் சுவடுகளே படாமல் இருக்கிறது.

குடிநீர், சாலை, சுகாதாரம், பேருந்து உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இங்கில்லை. இன்னும் கொடுமை என்னவென்றால், நடுநிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள், உயர்கல்வியை தொடர முடியாத சூழல் நிலவுகிறது.

வனவிலங்குகள் உலா வரும் என்பதால் உயிருக்கும் அஞ்சம் பெற்றோர், பிள்ளைகளை உயர்படிப்பு தொடர அனுப்பவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் உள்ள நூற்பாலைகளுக்கு பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் வேலைக்கு அனுப்பி வைக்கின்றனர். 3 ஆண்டுகள் ஒப்பந்தம் முடிந்ததும், அந்த பெண் பிள்ளைகளுக்கு 3 லட்சம் வழங்கப்படுகிறது.

ஒப்பந்த முடிந்து வீடு திரும்பும் பெண் பிள்ளைகளுக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்கப்படுகிறது. குடும்ப வருவாய்க்காக சிறு குழந்தையிலேயே தொழிலாளராக மாற்றப்படும் பெண் குழந்தைகள் உடல் மற்றும் மன ரீதியாக அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

மலரும் முன்னே கருகும் பெண் குழந்தைகளின் இந்தநிலை மாற அரசு உதவ வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.

More News >>