இந்திய அணி மிகப்பெரிய சாதனை!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி-20 போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி டி-20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் கட்டாக்கில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்தெடுத்தது. ஆரம்பம் முதலே அதிரடி பாணியை கையில் எடுத்த இந்திய அணி லோகேஷ் ராகுல் மற்றும் அனுபவ வீரர் தோனியின் சிறப்பான ஆட்டத்தால், 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.
181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோரின் சுழலை சமாளிக்க முடியாமல் திணறினர். இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத இலங்கை அணி 87 ரன்களில் சுருண்டது. இதனால் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்திய அணி சாதனை:
டி-20 போட்டியில் இந்திய அணி 2006 ஆம் ஆண்டு முதல்முறையாக களம் இறங்கியது. அதன் பிறகு கடந்த 2012 ஆம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரோகித் சர்மா தலைமையிலான இளம்படை இந்த சாதனையை முறியடித்துள்ளது. அன்றைய போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் மிகப்பெரிய என்ற சாதனையை பதிவு செய்தது.
இலங்கை மோசமான சாதனை:
அதே சமயம் இலங்கை அணி மோசமான புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்தப்போட்டியில் இலங்கை அணி சுருண்டது மிக மோசமான தோல்வியாகும். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 85 ரன்களில் சுருண்டதே மோசமான தோல்வியாக இருந்தது.
தோனி சாதனை:
முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி விக்கெட் கீப்பர் தோனி, தென்னாப்பிரிக்கா விக்கெட் கீப்பரான டிவில்லியர்ஸ்சின் சாதனையை முறியடித்துள்ளார். டிவில்லியர்ஸ் 78 டி-20 போட்டிகளில் 72 பேரை கேட்ச் செய்துள்ளார். தோனி 84 போட்டிகளில் 74 பேரை கேட்ச் செய்து டிவில்லியர்ஸ்சின் சாதனையை முறியடித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக தோனி 272 டி-20 போட்டிகளில் 201 பேரை வீழ்த்தியுள்ளார். இந்த வரிசையில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் 211 போட்டிகளில் 207 பேரை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.