ரெட்பஸ்ஸூக்கு 53 ஆயிரம் ரூபாய் அபராதம்

ஆன் லைன் மூலம் பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் இணையதளம் ரெட்பஸ் (RedBus). வாடிக்கையாளருக்கு சிரமம் மற்றும் பண இழப்பு ஏற்பட காரணமாக இருந்ததாக, மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பாயம் ரெட்பஸ் நிறுவனத்துக்கும் அதனுடன் ஒரு தனியார் பேருந்து நிறுவனத்துக்கும் ரூ,53,000 அபராதம் விதித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் அம்மாரி கிராமத்தைச் சேர்ந்தவர் எல்.பாஸ்கரன். அவர் பணியாற்றிய நிறுவனம், கடந்த 2015ம் ஆண்டு சென்னை விமான நிலையத்திலிருந்து பஹ்ரைன் செல்வதற்கு விமான சீட்டு வழங்கியிருந்தது.

ஏப்ரல் மாதம் 5ம் தேதி இரவு 9:35 மணிக்கு சென்னையில் புறப்படும் விமானத்தில் பாஸ்கரன் பயணம் செய்திருக்க வேண்டும். மதுரையில் இருந்த பாஸ்கரன், சென்னை வருவதற்காக ரெட்பஸ் இணையதளம் மூலம் பேருந்துக்கு முன்பதிவு செய்தார்.

ஸ்ரீ சரவணா டிராவல்ஸ் என்ற நிறுவனம் இயக்கும் பேருந்தின் ஓட்டுநர், காலை 10:45 மணிக்கு பேருந்து மதுரையில் புறப்பட்டு மாலை 6:15 மணிக்கு சென்னை சென்றடையும் என்று கூறியிருந்தார்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் குறித்த நேரத்தில் பாஸ்கரன் பேருந்தில் ஏறியும், பேருந்து பிற்பகல் 12:45 மணிக்குத்தான் மதுரையை விட்டு புறப்பட்டது.

இந்த தாமதத்தின் காரணமாக, பாஸ்கரன் விமானத்தை தவறவிட்டார். மீண்டும் ஏரபில் நகருக்கு பத்து நாட்கள் கழித்து விமான சீட்டு வாங்கி பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக அவருக்கு பத்து நாட்கள் ஊதிய இழப்பும் ஏற்பட்டது. பாஸ்கரன் அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பாயம், ரெட்பஸ் மற்றும் ஸ்ரீ சரவணா டிராவல்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் 50,000 ரூபாய் அபராதத்தை ஆறு சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டுள்ளது.

More News >>