ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அரசு உத்தரவுப்படி அந்த ஆலைக்கு கடந்த மே 28ம் தேதி சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து வேதாந்தா குழுமம், டெல்லியிலுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
வழக்கில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, ஸ்டெர்லைட்டால் பாதிப்பு ஏற்பட்டதா என்பதை விசாரிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற வசீப்தர் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், குழுவில் இருந்து விலகுவதாக வசீப்தர் தெரிவித்துள்ளார். சொந்த காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த தகவல் இன்று காலை வெளியானது. இதனிடையே, பிற்பகலில், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், தமிழக அரசாணைக்கு எதிராக வழக்கு தொடர வேதாந்தா நிறுவனத்திற்கு அதிகாரம் கிடையாது. அதிகாரம் இல்லாத ஒரு மனுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணைக்கு எடுத்துள்ளது. அந்த மனுவை விசாரித்து, விசாரணை குழுவையும் அமைத்துள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.