நான்காவது டெஸ்ட் - 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து
By SAM ASIR
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சௌத்தாம்டன், ரோஸ் பௌல் மைதானத்தில் நடக்கிறது. மூன்றாவது டெஸ்டில் ஆடிய இங்கிலாந்து அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
கிறிஸ் வோக்ஸ், ஓல்லி போப் ஆகியோர் நீக்கப்பட்டு சாம் குர்ரன், மொயின் அலி இருவரும் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. இங்கிலாந்து டாஸ் வென்று, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்துக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியை அளித்தார் பும்ரா. நான்கு பந்துகளை சந்தித்திருந்த கேட்டன் ஜென்னிங்ஸ் ரன் ஏதும் எடுக்காதநிலையில் எல்பிடபிள்யூ முறையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்த இடைவெளியில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தன. அதிகப் பட்சமாக சாம் குர்ரன் 78 ரன்களும் மொயின் அலி 40 ரன்களும் எடுத்தனர். 76.4 ஓவரில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்திருந்தது.
ஜஸ்பிரித் பும்ரா 3, இஷாந்த் சர்மா, முகமது சமி, அஸ்வின் ஆகியோர் தலா 2, ஹர்திக் பாண்ட்யா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இஷாந்த் சர்மா தனது 250வது டெஸ்ட் விக்கெட்டை இந்த ஆட்டத்தில் கைப்பற்றினார்.
தொடர்ந்து முதலாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 3 ரன்களுடனும் லோகேஷ் ராகுல் 11 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர்.